×

மாடுகளின் மடிவீக்கத்தை கட்டுப்படுத்தும் கற்றாழை

ராமநாதபுரம், மார்ச் 27: சோற்று கற்றாழையை பயன்படுத்தி கோழிக்கு வெள்ளைக்கழிச்சல் நோயையும், மாடுகளுக்கு மடிவீக்க நோயையும் கட்டுப்படுத்தலாம் என்று கால்நடை பராமரிப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர். பாலைவனத்தின் அல்லி என்று சோற்றுக்கற்றாழை அழைக்கப்படுகிறது. இது ஆப்பிரிக்காவை தாயகமாக கொண்டது. முதிர்ந்த கற்றாழைச்செடி சராசரியாக 36 அங்குலம் நீளமாக வளரக் கூடியது. ஒவ்வொரு செடியிலும் 16 மடல்கள் வரை இருக்கும். சர்வரோக நிவாரணியான இச்செடி கால்நடை மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது என கால்நடை பராமரிப்புத் துறை தெரிவித்துள்ளது. ‘‘பல நூறு ஆண்டுகளுக்கு முன்பபே தீக்காயத்திற்கும், நோய்தொற்று தடுப்பிற்கும் கற்றாழை மருந்தாக பயன்படுத்தப்பட்டு உள்ளது. இதன் உட்பொருளான ஜெல் எனப்படும் கூழ் மருத்துவ குணங்களை கொண்டது. இதை வெளிப்பூச்சாக மட்டுமல்லாமல் உட்கொள்ளவும் பயன்படுத்தலாம்.

சோற்றுக்கற்றாழை, மஞ்சள், புளியம் பழம் ஆகியவற்றை அரைத்து அரிசி குருணையுடன் கலந்து கோழிகளுக்கு கொடுக்கலாம். இதன்மூலம் வெள்ளைக்கழிச்சல் தடுக்கப்படும். கறவை மாடுகளை பொறுத்தளவில் மடிவீக்கத்தை குறைக்க இதனை பயன்படுத்தலாம். இதற்காக சோற்றுக்கற்றாழை மடல், மஞ்சள் 50 கிராம், சுண்ணாம்பு 5 கிராம் என்ற அளவில் எடுத்து கொண்டு 150மிலி தண்ணீர் சேர்த்து அரைக்க வேண்டும். காம்பில் இருந்து பாலை முழுவதும் கறந்த பின்பு மடி முழுவதும் இக்கலவையை தடவ வேண்டும். ஒருநாளைக்கு 6 முறைக்கு மேல் தடவினால் வீக்கம் குறையும். ஒருமுறை அரைத்து வைத்துவிட்டு நாள் முழுவதும் பயன்படுத்த கூடாது. ஒவ்வொருமுறையும் புதியதாக தயாரித்தே பயன்படுத்த வேண்டும்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை